நல்லூரில் மூன்றாவது முறையாக நீர்க் கண்காட்சி
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி மூன்றாவது முறையாக நாளைய தினம் (02.09.2026) நல்லூரில் ஆரம்பமாகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக, வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.
நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில், செப்டெம்பர் 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கண்காட்சி ஆரம்பமாகவுள்ளது.
பாரம்பரிய நிகழ்வுகள்
தொடர்ந்து செப்டெம்பர் 11ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஊருணி ஆற்றுகைக் களத்தில் தினமும் மாலை 7 மணி முதல் கருத்துரைகள், கலை, பண்பாட்டு மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பாக இன்றைய தினம் (01.09.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த குறித்த நீர்வளம் பேணும் செயற்றிட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா, கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட நீர் சார்ந்த ஆய்வுச் செயற்றிட்டங்களின் பெறுபேறுகளும், மக்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் கிடைத்த அனுபவங்களும் இந்தக் கண்காட்சியில் தொகுத்து வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீரியல் ஆய்வுகளின் பெறுபேறுகளுடன், சமூகத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீர்வளப் பாதுகாப்பு
குறிப்பாக, வழுக்கையாற்றை சமூகத்தின் பேசுபொருளாக மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள், ஊரவர்களின் கற்பனைகள் மற்றும் பிரதேச சபைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நீர்வளப் பாதுகாப்பு தொடர்பில் மேலதிக தெளிவு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிணறுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலில் தங்கியிருக்கும் சமூகமாகிய வடமாகாண மக்களுக்கு நிலத்தடி நீரைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றும், அதற்காக கிணறுகளை முறையாகப் பராமரிப்பதுடன், நீர் சேமிப்புக்கு உகந்த ஊர்க் குளங்களைத் தூர்வாரி பயனுள்ள வகையில் நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கிராமிய குளங்களை மக்களின் பங்களிப்புடன், தொழில்நுட்ப அறிவு மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி முறையாகத் தூர்வாருவது தொடர்பான அனுபவங்கள் மற்றும் அதன்மூலம் பெறப்பட்ட பாடங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முப்பரிமாண வடிவங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் ஊடாக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளை விட இம்முறை நிலத்தடி நீர் தொடர்பான தெளிவை மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு புதிய காட்சிப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன. நிலத்தடி நீர் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் பங்களிப்புடன் தீர்மானங்களை எடுக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan