நீர் கட்டண அதிகரிப்புக்கு இதுவே காரணம்: போட்டுடைத்தார் திலங்க
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டணியின் செயலாளர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று (03.08.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவித்துள்ளதாவது, மக்கள் கடும் பொருளாதார கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அரசாங்கம் நீர் கட்டணத்தை அதிகரித்துள்ளமை மக்கள் மீது சுமத்தியிருக்கும் பாரிய சுமையாகும்.
புதிய நீர் கட்டணம்
புதிய நீர் கட்டணத்தின் பிரகாரம் முதல் 5 அலகுகளுக்கு இதவரை அறவிடப்பட்ட 20 ரூபா தற்போது ஒரு அலக்குக்கு 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று மாதக்கட்டணத்தை 15 அலகுகள் வரை 300 ரூபாவாக அதிகரித்திருக்கிறது.
சாதாரண வீட்டுப்பாவனையாளர்கள் மாதத்துக்கு 15 அலகுகள் வரையே நீர் பாவிக்கின்றனர்.
நீர் பானையாளர்களில் நூற்றுக்கு 62 வீதமானவர்கள் மாதத்துக்கு 15 அலகுகள் பாவிப்பவர்களாகும்.
மக்களுக்கு நிவாரணம்
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசாங்கம் அனைத்து வகையான கட்டண அதிகரிப்புகளை மேற்கொள்ளும் அதில் சந்தேகம் இல்லை.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு வறுமை நிலையில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க எந்த திட்டமும் இல்லை.
எனவே நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |