தாஜுதீன் கொலை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மகிந்த ராஜபக்சவின் வீடு: கோப் குழுவில் வெளியான சர்ச்சைக்குரிய தகவல்
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான இல்லமொன்று குறித்து பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் (COPE) சர்ச்சைக்குரிய மற்றும் அதிரடித் தகவல்கள் சில வௌியாகியுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஆவணங்கள்
குறித்த வீடு கொழும்பு மாத்தா பாதையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் அமைந்துள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு தெற்கு பகுதியில் மாத்தா வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பில் 1999 ஆம் ஆண்டு அன்று அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்சவின் பெயரில் இந்த வீடு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக்காக வழங்கப்படும் கார்டில் மகிந்த ராஜபக்ச என பெயர் குறிப்பிடப்பட்டு அன்றை பெறுமதியாக 45 இலட்சம் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பணம் செலுத்தியதற்கான எவ்வித ரசீதுகளும் இணைக்கப்படவில்லை என கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்றைய நிலையில் குறித்த வீட்டுக்கான ஆவணங்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தென் பகுதி அலுவலகத்தில் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி குறித்த ஆவணங்கள் எப்படி காணாமல் போனது மற்றும் அது தொடர்பான தகவல்களை தேடி பார்க்குமாறு கோப் குழு அதிகார சபைக்கு அறிவிறுத்தியுள்ளது.