அநுரவின் சீன விஜய எதிரொலி: இந்திய பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர் கப்பல்கள்
இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எடுத்துகாட்டும் விதமாக இந்தியாவானது மூன்று போர்கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியக் பெருங்கடலில் சீனாவின் இருப்புக்கு சவால் விடும் வகையில் இந்த கப்பல்களை மோடி தரப்பு அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் இராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று, INS SURAT, INS NILGIRI, INS VAGHSHEER ஆகிய போர்க்கப்பல்களை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்திற்கு மத்தியில், பல ஆண்டுகளாக, மூலோபாய கடல் சார் பகுதியாகக் கருதும் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவான இலங்கையில், சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சித்து வருவதாகவும், இதற்கு மோடி அரசு மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோடியின் கருத்து
மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று கப்பல்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல்கள் மூலம் கடற்படை வலுவடையும் என மோடி இதன்போது தெரிவித்துள்ளார்.
INS சூரத் போர்க்கப்பல் P15B எனப்படும் GUIDED MISSILE DESTROYER திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதி கொண்ட INS சூரத் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் BARAK-8 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செலுத்த முடியும்.
INS நீல்கிரி போர்க்கப்பல் கடலில் எத்தகைய சூழல் இருந்தாலும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும். குறிப்பாக எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிரிகளின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டுபிடித்துவிடும்.
மேலும் அவற்றை தாக்கி அழிப்பதற்கான ஆயுதங்களும் இதில் உள்ளன.
3 போர்க்கப்பல்கள்
P75 SCORPENE திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் INS VAGHSHEER. இதன்மூலம் கடலுக்கு அடியில் இருந்து தாக்குதல் நடத்த முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
3 போர்க்கப்பல்களையும் நாட்டுக்கு அர்பணித்த பிறகு கருத்து தெரிவித்த மோடி, உலகின் முக்கிய கடல்சார் வல்லரசாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றார்.
நம் நாட்டின் செயல்பாடுகள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே தவிர, விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என மோடி தெரிவித்தார்.
இதன்மூலம் கடல் மற்றும் நிலப்பரப்பில் அவ்வப்போது எல்லை மீறலில் ஈடுபடும் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக புவிசார் இந்திய வல்லுநர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
மேலும், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் QUAD கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ள நிலையில், இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க QUAD கூட்டமைப்பு விரும்பி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |