பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (12.9.2026) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (13) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும்.
குறித்த அறிவிப்பின்படி, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
எச்சரிக்கை
அதேபோல், சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.