முறையான தகுதிகள் இல்லாதவர்கள் இலங்கையில் மருந்துகளை விநியோகிப்பதாக எச்சரிக்கை
இலங்கையில் முறையான மருத்துவத் தகுதிகள் இல்லாத சுமார் 40,000 பேர் மருந்துகளை விநியோகிப்பதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக, சங்கத்தின் தலைவர் ருவான் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
மருந்தகங்களில் பணியாற்றிய அனுபவம்
தகுதியற்ற நபர்களும் மருந்தகங்களில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை வழங்குகின்றனர்.
மருத்துவர்களின் ஆலோசனையின்றி நோயாளிகள் தாங்களாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை (Antibiotics) பெற்றுக்கொள்கின்றனர்.

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக மருந்து எதிர்ப்புத் திறன் அதிகரித்து வருகிறது.
மருத்துவ சபையில் பதிவு
இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கே மேற்கத்திய மருத்துவ முறையிலான மருந்துகளைப் பரிந்துரைக்க சட்ட அங்கீகாரம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் செயலிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.