புதிய வைரஸ் திரிபு தொடர்பில் இலங்கையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இங்கிலாந்தில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கையில் பரவும் நிலை காணப்படுவதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதான தொற்று நோய் விஞ்ஞானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாது பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் புதிய திரிபு விமான நிலையம் அல்லது துறைமுகம் ஊடாகவே நாட்டுக்குள் பரவ முடியும்.
இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களை சிகிச்சை முடியும் வரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது.
இந்த புதிய திரிபு நாட்டுக்குள் வரும் ஆபத்து இருக்கின்றது. நாம் தொடர்ந்தும் உன்னிப்பான அவதானத்துடன் இருக்க வேண்டும்.
வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு தற்போது ஜப்பான், டென்மார்க், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் உலகில் பல நாடுகள் பிரித்தானியாவுடனான விமான பயண தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
தென் ஆபிரிக்காவிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டதுடன் அதுவும் பரவி வருகிறது என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.