இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடையும்! மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 6% க்கும் அதிகமாக சுருங்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சமூக அமைதியின்மை, சர்வதேச நாணய நிதியத்துடனான நிதி நிவாரண பேச்சுவார்த்தைகளை பாதிக்கும்.இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் 6 சதவீத சுருக்கம் நிலை ஏற்படும்.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி
கோவிட் தொற்றுநோயின் தாக்கம் காரணமாக 2020 இல் இலங்கையின் பொருளாதாரம் 3.5 சதவீதத்தால் சுருங்கியுள்ளது. எனவே, கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள இலங்கையின் பொருளாதாரத்தையும், இலங்கை மக்களின் வாழ்க்கையையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது.
பெரிய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு நிலையான அரசியல் நிர்வாகம் தேவை, அதே போல் எரிபொருள், மருந்துகள் போன்ற முக்கிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த உதவுவதற்காக பிற நாடுகள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து குறுகிய கால திட்டத்தில் நிதியுதவி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று, 4
பில்லியன் டொலர் கையிருப்பு கையில் இருக்கும் போதே அதன் கடன்களை மறுசீரமைக்க
முயன்றிருந்தால், இன்று இலங்கை மக்கள் துன்பத்தில் வீழ்ந்திருக்க மாட்டார்கள்
என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் சுட்டிக்காட்டியுள்ளார்.



