ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ஆசிரியர் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை (Photod)
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்யாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை முடக்கி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை அரசாங்க ஆசிரியர்கள் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கங்களின் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அண்மையில் சிவானந்தா தேசிய பாடசாலையினை மூடி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்நுழைவது தடுக்கப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன். உதயரூபனை குறித்த பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யுமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தினையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இன்று பிற்பகல் 1.45 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்வாதிகளின் குண்டர்களை கைதுசெய், ஆசிரியர்களை அதிகார அரசியல்கொண்டு அடக்காதே, குண்டர்களை வைத்து மாணவர்களின் கல்வியை சீரழிக்காதே,அரசியல் கைக்கூலி சிவானந்தா அதிபரே உடன்வெளியேறு, வங்குரோத்து அரசியலை கல்விக்குள் புகுத்தாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் எச்எம்.சமீன் உட்பட பெருமளவான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பாடசாலையினை அண்மித்த பகுதியில் கண்டன பேரணியும் நடாத்தப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் குண்டர்களை கைது செய்ய காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கையெடுக்காவிட்டால் இலங்கை பூராகவும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முடக்கி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும் என இங்கு எச்சரிக்கப்பட்டது.
சிவானந்தா தேசிய பாடசாலையில் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.





