எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்! கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
தொற்று நோய்கள் மீண்டும் பரவும் அபாயம்
அவர் மேலும் கூறுகையில், குறிப்பாக நாட்டில் பரவலாக காணப்பட பல தொற்று நோய்களை நாம் ஒழித்துள்ளோம்.
எம்மால் மலேரியா, அம்மை நோய்கள் மற்றும் தொழு நோய்கள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டது.
இருப்பினும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது தொற்று நோய்கள் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும், பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் கூறுகையில், சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலைமையால் சிறுவர்களுக்கு காய்ச்சலினால் வலிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் அடையாளம்
அத்துடன் இவ்வருடத்தின் ஜனவரி முதல் தற்போது வரை டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 54,083 ஆக அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் 25 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகள், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து 42 வீத டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டம் 5 வீதம், கண்டி மாவட்டத்தில் இருந்து 10 வீதம், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 8 வீதம், பதுளை மாவட்டத்தில் இருந்து 4 வீத நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், பிலியந்தலை, ஹோமாகம, பிடகோட்டே, கொத்தடுவ, பியகம, திவுலப்பிட்டிய, கட்டான, மஹர, மீரிகம, களுத்துறை, ஹாரிஸ்பத்துவ, வத்தேகம, மஹவெவ, மற்றும் வரக்காபொல பிரதேசங்களில் உயர் அபாய நிலைகள் குறைந்துள்ளதுடன், நீர்கொழும்பு, பாணந்துறை, யட்டிநுவர, கரந்தெனிய, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், அதிகபட்ச நோயாளர்களின் எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் 11,364 ஆகவும், இரண்டாவது அதிக எண்ணிக்கையான நோயாளிகள் கம்பஹா மாவட்டத்திலிருந்து 7,803 ஆகவும் உள்ளனர்.
