மன்னாரில் அதானியின் திட்டத்துக்கு அங்கீகாரம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மன்னாரில் (Mannar) அதானி (Adani) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள உயர் மின் திட்டத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (08.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் தீவில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள அதானி நிறுவனத்தின் திட்டத்தினால் எமக்கு வர உள்ள அழிவுகள் குறித்து நாங்கள் பல வருடங்களாக கூறி வருகிறோம். குறித்த திட்டத்தினால் எமது வாழ்விடம் திட்டமிட்டு பறிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதியின் முடிவு
எமது பண்பாடு மற்றும் வரலாற்றுச் சுவடுகள் அழிக்கப்பட போகின்றது.மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படப் போகின்றார்கள்.
மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களின் எதிர்கால நலவாழ்வும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
எமது வளமான மண் அழிக்கப்பட்டு, எதுவும் அற்ற ஒரு நிலைக்கு தள்ளப்படும். எனவே
எமது மக்களை ஒன்று கூட்டி பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாங்கள்
தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது முடிவை நாங்கள் எதிர்பார்க்க உள்ளோம்.
திட்டமிட்ட அபகரிப்பு
மன்னார் தீவில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி நல்லதொரு தீர்வை வழங்குவாராக இருந்தால் எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்படும்.
எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விட்டால் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.மன்னார் தீவில் இருந்து ஒரு துண்டு நிலத்தை கூட நாங்கள் இந்தத் திட்டங்களுக்கு வழங்க மாட்டோம்.
மேலும், கணிய மணல் அகழ்வினால் எமது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு போதிய விளக்கம் இன்மையினால் மக்களிடம் இருந்து திட்டமிட்ட வகையில் காணிகள் அபகரிக்கபடுகிறது.
அத்துடன், சுமார் 500 ஏக்கர் வரையிலான காணிகள் காணி உரிமையாளர்களிடம் கணிய மணல் அகழ்வுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த திட்டங்களையும் நாங்கள் முற்று முழுதாக எதிர்க்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் : அ. ராயூகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |