நாளை அதிகரிக்கும் வெப்பம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (30) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், நாளை (01) வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலை
இதன்படி, குறித்த பகுதிகளில் சில இடங்களில் பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஒப்பீட்டு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெப்பச் சுட்டெண் கணக்கிடப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீண்ட நேரம் வெயிலில் இருப்பது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோர்வை ஏற்படுத்தக்கூடும் எனவும், தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது வெப்பப் பிடிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, போதுமான அளவு நீரை அருந்துவதுடன், அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.