ட்ரம்பின் நிலை தான் அநுரவுக்கும்.. அமெரிக்காவுக்காக உளவு பார்க்கின்றதா அரசாங்கம்..! எழுந்துள்ள புதிய சர்ச்சை
மக்கள் மீது வரிகளைச் சுமத்தி பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தால், அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்புக்கு ஏற்பட்ட தோல்வியே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எச்சரித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (14) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும், "அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைய ஈரான் யுத்தம் மாத்திரமல்ல, அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் முக்கிய காரணமாகும்.
தமிழர்களின் நினைவுகூரல் விவகாரம்
ஜனாதிபதி ஆட்சிமுறை உள்ள அனைத்து நாடுகளிலும் இதுவே நடக்கும். இந்த அரசாங்கம் தமது கார்த்திகை வீரர் தினத்தை அனுசரித்துவிட்டு, தற்போது மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டத்திற்குச் செல்வது குறித்துப் பேசுகிறது.

அரசாங்கம் தமது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் அதேவேளை, தமிழ் மக்கள் தம்மவர்களை நினைவுகூருவதற்குச் சமத்துவமான உரிமையை வழங்காமல் அவர்களின் நினைவுச் சின்னங்களை அழிப்பது முரண்பாடானது.
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள், இடைக்கால குறைநிரப்புப் பிரேரணை ஊடாக 4 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியில் இஸ்ரேலிடமிருந்து ஆளில்லா வேவு விமானங்களை (Drones) அவசரமாகக் கொள்வனவு செய்வது ஏன்.
ஈரானியக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அமெரிக்காவுக்கு உளவுத் தகவல்களை வழங்கவே இலங்கை கடற்படையும் இஸ்ரேலிய விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
அத்துடன், பலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவர் அறிக்கை ஒன்றையாவது வெளியிட வேண்டும்” என வலியுறுத்தினார்.