வங்காள விரிகுடாவில் மீண்டும் தீவிரமடையும் காற்றழுத்தம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்த பகுதி, இன்று காலை (15) நிலவரப்படி திருகோணமலையிலிருந்து சுமார் 600 கி.மீ. கிழக்கே நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த அமைப்பு இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேலும் வடக்கு நோக்கி, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றுக்குள் ஒரு 'தாழ்வழுத்தமாக' உருவாக வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் வானிலையில் மாற்றம்
இந்த அமைப்பின் தாக்கத்தால், இன்று நாடு முழுவதும் வானம் மேகமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யும்.
நாட்டின் மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.