ஈரான் போர் செலவு 37.5 பில்லியன் டொலராக உயர்வு..! அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் நிதிக்கழு முன் முன்னிலையாகி சாட்சியமளித்த அவர், பாதுகாப்புத் துறைக்காகக் கோரப்பட்டுள்ள 1.5 டிரில்லியன் டொலர் பட்ஜெட்டில், ஈரான் போருக்காக மட்டும் கிட்டத்தட்ட 70 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் அமெரிக்க நிர்வாகம் அறிவித்த 29 பில்லியன் டொலரை விட தற்போதைய செலவு கணக்கீடு 8 பில்லியன் டொலர் அதிகமாகும்.
இதேவேளையில், ஆற்றல் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் அமெரிக்காவிற்கு ஏற்படும் மறைமுக செலவு 150 பில்லியன் டொலர் வரை செல்லக்கூடும் என மூடிஸ் அனலிடிக்ஸ் கணித்துள்ளது.

போரினால் அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்புகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளின் உற்பத்தியை விரைவுப்படுத்த கூடுதல் நிதி தேவை என்றும் ஹெக்செத் வலியுறுத்தியுள்ளார்.
தொடர் தாக்குதலுக்கான இருப்பு பற்றாக்குறை
கடந்த வாரம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அமெரிக்க வீரர்கள் இருவர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி தொடர்பான “பிகேக்ஸ் மவுண்டன்” பகுதி மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இந்த பிரம்மாண்டமான நிதி கோரிக்கை தெளிவற்றதாக இருப்பதாக ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஈரானும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீது தொடர்ந்து பதிலடித் தாக்குதல்களை நடத்தி வருவதால் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.