மிருசுவில் பகுதியில் பெண்ணின் மோட்டார் சைக்கிள் பெட்டியிலிருந்து பணப்பை திருட்டு
மிருசுவில் பகுதியில் பூட்டப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் உள்பெட்டியிலிருந்து நூதன முறையில் பணப்பையினைத் திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(05.10.2026) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மிருசுவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பை ஒன்றினை அவரது மோட்டார் சைக்கிள் நீண்ட காலமாக வைத்திருந்துள்ளார்.
திருட்டு
தனது வேலையின் நிமிர்த்தமாக பொது இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளின் உள்ளே இருந்த பணப்பையினை அடையாளம் தெரியாத சிலர் உட்புற பெட்டியை நூதனமாக திறந்து அதிலிருந்த பல்வேறு ஆவணங்களையும் அதற்குள் இருந்த சுமார் 5000 ரூபாய் பணத்தினையும் அபகரித்துள்ளனர்.
திருடப்பட்ட பணப்பையிலிருந்து தானியங்கி வங்கி அட்டையினை (ATM) மாத்திரம் எடுத்துவிட்டு, புத்தூர் கொடிகாமம் வீதியின் வேம்பிராய் சந்தித்திக்கு அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

குறித்த ஆவணங்களை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த புத்தூர் நவக்கிரியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கண்டெடுத்து அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அவற்றுள் அடையாள அட்டை, வங்கிப் புத்தகங்கள், சாரதி அனுமதி அட்டை, உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து ஆவணங்கள் அடங்கிய பணப்பையினுள் காணப்பட்ட பெண்ணின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தவறவிட்ட பெண்ணிடம் குறித்த ஊடகவியலாளர் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
இருப்பினும் வங்கி அட்டையினை திருடியவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் கடை ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, கைதடியில் இயங்கும் மதுபான சாலையில் சுமார் 20 ஆயிரத்து 600 ரூபாய்க்கு மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளனர்.
மதுபானங்களை கொள்வனவு செய்ததற்கான விலை சிட்டை குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு குறும் செய்தியாக கிடைத்துள்ளது.

இதற்கிடையில் ஆவணங்களைத் தவறவிட்ட பெண் கொடிகாமம் பொலிசில் தனது பணப்பை திருடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.