வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வெளிநடப்பு!
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரது செயற்பாட்டை கண்டித்து உப தவிசாளர் உட்பட 14 உறுப்பினர்கள் அமர்வில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகியன இணைந்து ஆட்சி அமைத்துள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் இன்று (23.09.2026) இடம்பெற்றது.
இதன்போது சபை அலுவலகத்தில் பூட்டப்பட்டுள்ள சோலர் முறைமையில் பழுது ஏற்ப்பட்டுள்ளதால் அதனை திருத்துவதற்காக சபை நிதியில் இருந்து ஒரு தொகையை விடுவிப்பதற்கான பிரேரனையினை தவிசாளர் முன்வைத்திருந்தார்.அதற்கு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் உட்பட அனேகமான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெளிநடப்பு
சோலருக்கான உத்தரவாத காலம் இன்னும் உள்ள நிலையில் எதற்காக சபை நிதியை செலவு செய்கிறீர்கள் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன்போது சபை தவிசாளருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரன்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து சபையின் உப தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் பலர் தவிசாளரது இச் செயற்பாட்டையும் அவரது தன்னிச்சையான செயற்பாடுகளையும் கண்டித்து சபைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

குறிப்பாக 23 உறுப்பினர்களை கொண்ட குறித்த பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 14 உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்திற்கு எதிராக வெளிநடப்பு செய்தனர். ஒரு உறுப்பினர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
