இலங்கை சரித்திரத்திலே முற்போக்குத் தமிழர் கழகத்தின் சாதனை: வியாழேந்திரன்
இலங்கை சரித்திரத்திலே முற்போக்குத் தமிழர் கழகம் இரண்டு பெரிய சாதனைகளை செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - கோவில்போரதீவில் நேற்று இரவு (17.09.2024) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மக்களின் வாக்குகள்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கணேசமூர்த்தி, சாணக்கியன் போன்றோர் 2010, 2012, 2015 கிஸ்புல்லாவையும், அமீர் அலியையும் அமைச்சர்கள் ஆக்குவதற்காக அவர்களின் கட்சிகளின் சின்னங்களிலே போட்டியிட்டு, தமிழ் மக்களின் வாக்குகளை சேகரித்து அவர்களை கடந்த காலத்திலே அமைச்சராகியவர்கள்.
ஆனால் இலங்கை சரித்திரத்திலும் மட்டக்களப்பின் சரித்திரத்திலும் முதன்முதலில் எட்டு தமிழர்கள் தேசிய கட்சியிலே நிறுத்தி முதன் முதலில் வெற்றி பெற்றவர் நாம் இது மட்டக்களப்பின் சரித்திரமாகும்.
அது மாத்திரமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து யாராவது வெளியேறினால் அவர்கள் வெற்றி பெற முடியாது.
74 வருட தமிழரசு கட்சியின் வரலாற்றிலே யாராவது வெளியேறினால் அவர்கள் வேறு கட்சியின் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அந்த சரித்திரத்தினை நாம் முறியடித்துள்ளோம்.
மட்டக்களப்பின் முடி சூடா மன்னன் சொல்லின் செல்வர் ராஜதுரை ஐயா கூட தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி தோற்றார்.
தங்கேஸ்வரி அம்மா தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி தோல்வி கண்டார்.
ஆனால் தமிழரசுக் கட்சி விட்டு வெளியேறி தேசிய கட்சி ஒன்றிலே போட்டியிட்டு முதன் முதலில் வெற்றி பெற்றவர் நாம், முதன்முதலில் தமிழர் முற்போக்கு கழகமாகிய நாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பெற்றுக் கொண்டுள்ளோம்.
எனவே எதிர்வருகின்ற தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல் ஆகும்.
எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மக்கள் அனைவரும் சென்று சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து ஜனாதிபதியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.