பிரித்தானிய வைரஸுக்கு ஒத்த வைரஸ் இலங்கையில்! முழு நாட்டையும் முடக்கும் நிலை வரலாமென எச்சரிக்கை
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸ் இல்லையென்ற போதிலும் அதற்கு ஒத்த வகையிலான வைரஸே பரவிக் கொண்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் றோகன ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் சகல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளது, இப்போது நாட்டில் அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாலம் காணப்பட்டு வருகின்றனர் என்றால் நாட்டில் வைரஸ் பரவல் அதிகம் என்பதே அதன் அர்த்தமாகும்.
இது சமூக தொற்றா அல்லது கொத்தணிகளா என்பது விவாதமல்ல, வைரஸ் தொற்று வேகமாக பரவிக்கொண்டுள்ளது.
இதற்கு காரணம் என்னவெனில் அவசியமான நேரத்தில் நாட்டை முடக்காது சகல பகுதிகளும் திறக்கப்பட்டமையே சகல நெருக்கடிக்கும் காரணமாகும்.
அரசாங்கம் சகல பகுதிகளையும் திறந்தவுடன் மக்கள் பொறுப்பு, கட்டுப்பாடுகள் சுகாதார வழிமுறைகள் என எதனையும் கருத்தில் கொள்ளாது அனாவசியமான செயற்பாடுகளில் ஈடுபட்டதன் விளைவே இப்போது அளவுக்கு அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணவும் காரணமாக அமைந்துள்ளது.
அதேபோல் எதிர்வரும் 21ஆம் திகதியுடன் விமான நிலையம் முழுமையாக திறக்கப்படவுள்ளது, சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளனர்.
ஒரு நாளைக்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக கடந்த செயலணிக் கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
எது எவ்வாறு இருப்பினும் பிரித்தானியாவில் காணப்படும் மாறுபட்ட வைரஸ் பரவல் ஆசியா உள்ளிட்ட 20 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் இப்போது பரவும் வைரஸ் வழமையாக இதுவரை காலமாக இலங்கையில் காணப்பட்ட வைரஸ் அல்லாது பிரித்தானியாவில் காணப்படும் வைரஸிக்கு ஒத்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
எனவே அரசாங்கம் இப்போது எடுக்கும் தீர்மானங்களில் எமக்கு உடன்பாடுகள் இல்லை. இப்போது நாம் தவறிழைப்பது மீண்டும் நாட்டினை முழுமையாக முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.