ஆளும் கட்சியினரின் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் எதிர்க்கட்சிகள்
ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தை சுற்றிவளைத்து தாக்க வேண்டும் என யோசனை முன்வைத்த அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் அணிகளும் உள்ளன.
எப்படியான சூழ்நிலையாக இருந்தாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். ஏப்ரல், 3,4,5 ஆம் திகதிகளில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் வீடுகளை சுற்றிவளைக்குமாறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறினர்.
அன்று 52 நாட்களில் அரசியலமைப்பு சூழ்ச்சி செய்யப்பட்டதாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தாக்கியவர்கள் மற்றும் கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக கைகளை தட்டிக்கொண்டு நீதிமன்றங்களில் முன்னிலையாகி வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடமை சபாநாயகருக்கு இருக்கின்றது. எங்களது வீடுகளை தீயிட்டு, வாகனங்களை எரித்து, எம்மை கொலை செய்து, எம்மை அச்சுறுத்தி எமது நிலைப்பாட்டை மாற்ற எவராவது முயற்சித்தால் அது நடக்காது.
எமது நிலைப்பாடுகளை மாற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப எமது வாக்குகளை பயன்படுத்த நினைத்தால், அது நடக்காது, எம்மிடம் அதனை எதிர்பார்க்க வேண்டாம்.
அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அமைதியாக வீடுகளுக்கு செல்லவிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி பேருந்துகளை எரித்தவர்களுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அவசர காலச் சட்டம், ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பொலிஸ் நிலையத்தின் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு பொலிஸ் மா அதிபரின் தேடிச் செல்லும் அளவுக்கு சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை பொலிஸாரினால் கைது செய்ய முடியாமல் போயுள்ளது. கடந்த காலங்களில் வீடுகளை எரித்தவர்கள் கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றம் ஒரு நாளில் பிணை வழங்குகிறது.
எனினும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களை அடக்க நடவடிக்கை எடுத்த பொலிஸாருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் காலம் தாழ்த்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். தங்கி இருக்க இடமில்லாது போயுள்ளனர்.
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிஸக் கட்சி, எதிர்க்கட்சித் தலைவரின் கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களும் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதன் பின்னணியில் உள்ளது எனவும் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
