குமார் குணரத்தினத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்பு
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கறுப்பு இனத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட் என்பவர், அந்நாட்டு பொலிஸாரினால் மிலேச்சத்தனமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். அதனை எதிர்த்து உலகின் பெரும்பாலான நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
நீதிமன்ற தடை
அதனையொட்டி முன்னிலை சோசலிசக் கட்சி இலங்கையிலும் அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக அவ்வாறான ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்திருந்தது.
கடந்த (09.06.2020) திகதி அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் அதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவின் பிரகாரம் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.
அதன் காரணமாக ஆர்ப்பாட்டத்துக்கு வருகை தந்தவர்கள் லிப்டன் சுற்றுவட்டாரத்தில் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதன் போது குமார் குணரத்தினம் உள்ளிட்ட 47 பேர் கோவிட் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாகவும், வேறு குற்றச்சாட்டுகளின் பேரிலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
அடிப்படை உரிமை மீறல்
இதனை எதிர்த்து குமார் குணரத்தினம், சட்டத்தரணி நுவன் போபகே, துமிந்த நாகமுவ, அளுத்வில சந்திரஜோதி தேரர் உள்ளிட்ட 47 பேர் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனு உச்ச நீதிமன்றத்தின் பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் சில்வா அமர்வின் முன் விசாரணைக்கு பரிசீலனைக்கு வந்த போது குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் 2024ம் ஆண்டின் ஜனவரி மாதம் 13ம் திகதி குறித்த மனு மீதான விசாரணை நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
