இமயமலைப் பிரகடனம் மிகவும் பயங்கரமானது: பதறுகின்றார் விமல்
இமயமலைப் பிரகடனம் மிகவும் பயங்கரமானது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு இன்று (21.12.2023) அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்ததால் இலங்கையைப் பிரிக்க முடியாமல் போனது. ஆனால், சூடானைப் பிரித்தனர்.
நோர்வேயின் அறிக்கை
இலங்கையைப் பிரித்திருந்தால், ஈழத்துக்கு அப்பாற்பட்ட பகுதியில்தான் தெற்காசியாவின் காசா பகுதி அமைந்திருக்கும். பாலஸ்தீன மக்களுக்கு இன்று நடப்பதுதான் சிங்கள மக்களுக்கு நடந்திருக்கும்.
இதுதான் உண்மைக் கதை. சமாதான முயற்சி ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்து நோர்வே ஆராய்ந்தது. பேராசிரியர்களால் 140 பக்கங்களில் அறிக்கையொன்று வழங்கப்பட்டது.
தோல்விக்கான காரணங்கள் அதில் விவரிக்கப்பட்டிருந்தன. சமஸ்டி ஆதரவு போக்கில் இருந்த சந்திரிக்கா அம்மையாரின் ஆதரவைப் பெற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க அப்போதைய பிரதமர் (ரணில் விக்ரமசிங்க) தவறியமை முதல் காரணம்.
இமயமலைப் பிரகடனம்
இலங்கையில் பிக்கு சமூகத்தின் ஆதரவைத் திறட்ட தவறியமை இரண்டாவது காரணமாகும். அதாவது பிக்குகளின் ஆதரவைத் திரட்ட உரிய வேலைத்திட்டமொன்று இருக்கவில்லை என முழுமையாகக் கூறவும் முடியாது.
சில பிக்குகள் இருக்கவே செய்தனர். தற்போது கூட டயஸ்போராக்கள், சில பிக்குகளைப் பிடித்துக்கொண்டு இமயமலைப் பிரகடனம் எனும் திட்டமொன்றை முன்னெடுக்கின்றனர்.
ரணில் கூறும் 13 இற்கு அப்பால் என்ற யோசனையை விடவும் மிகவும் பயங்கரமான திட்டத்துடன் மீண்டும் வந்துள்ளனர். ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் ஆதரவு இருக்கவில்லை எனவும் காரணம் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இன்று ஜே.வி.பியிடம் தேசியவாதம் இல்லை. ஊழல் எதிர்ப்புப் பற்றி மாத்திரமே குரல் எழுப்புகின்றனர். சந்திரிகாவும், ரணிலும்கூட நட்புடன் செயற்பட்டு வருகின்றனர்” என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |