வீதியில் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவரொருவர் நேற்று முன் தினம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி கிராம மக்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சிறுவன் கடந்த 9 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சென்று நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறுநாள் காலை அயல்வீட்டு கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுவனின் புத்தகப்பை கிணற்றுக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மரணமடைந்த சிறுவனுடன் விளையாடிய அயல்வீட்டு சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார் என கூறப்படுகிறது.
முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார்சைக்களில் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாக அவர் முன்னர் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கிணற்றில் விழுந்ததாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்,
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அச்சிறுவனை கைது செய்த ஓமந்தை பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவனது வீட்டில் இன்று காலை இடம்பெற்று சடலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் கிராமத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வீதியில் சடலத்தினையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதன் உண்மைத்தன்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.









