கொழும்பில் பல முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்ட இந்திய வெளியுறவுச் செயலர்
கொழும்பில் பல முக்கிய சந்திப்புகள் மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுகளுடன் கூடிய ஒரு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்த இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, நேற்று மாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த வெளியுறவுச் செயலரின் விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முழுமையான பரிமாணங்களை மீளாய்வு செய்வதற்கும், பன்முகத் தன்மையைக் கொண்ட இந்தியா - இலங்கை கூட்டுறவின் வலிமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று(05) சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதானமாகப் பிராந்திய அபிவிருத்தி மற்றும் இலங்கை - இந்தியா இடையிலான நீண்டகால விசேட உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இரு நாடுகளின் பரஸ்பர நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான தொடர்புகளும் நெருங்கிய ஒத்துழைப்பும் அவசியமானது என்பதை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்திய வம்சாவளித் தமிழர்
இதேவேளை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் இந்திய வம்சாவளித் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பும் நேற்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின்போது, இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் இந்திய அரசின் பல்வேறு அபிவிருத்தி முன்முயற்சிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
விக்ரம் மிஸ்ரி, நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கை மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.


