விஜயதாசவின் கட்சி தலைமை பதவி: நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ள நீதிமன்றம்
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை(Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமித்தமைக்கு எதிரான தடை உத்தரவு தொடர்பான உண்மைகளை முன்வைக்க அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு(Duminda Dissanayake) கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தநிலையில், குறித்த மனுவை ஏற்று தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து நீதிமன்றம் இன்று(16.05.2024) தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கட்சித் தலைவராக செயற்படுவதற்கு சகல தரப்பினரும் இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் கடுவெல மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
துமிந்த திசாநாயக்கவின் முறைப்பாடு
இந்தநிலையில், துமிந்த திசாநாயக்கவின் முறைப்பாட்டின் நிலைப்பாட்டை சவால் செய்யும் வகையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா ஆட்சேபனைகளை நேற்று முன்வைத்தார்.
எனினும் துமிந்த திஸாநாயக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர, கடுவெல மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வாதிட்டார்.
இதனையடுத்தே, துமிந்த திசாநாயக்கவின் தடை உத்தரவு தொடர்பான மனுவின் மீதான அறிவிப்பு நாளை காலை வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான தெரிவித்தார்.
முன்னதாக மைத்ரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவருக்கு நீதிமன்றம் தடையுத்தரவை விதித்தது.
இந்த உத்தரவு பின்னர் வந்த நீதிமன்ற அமர்வுகளில் விசாரணை முடியும் வரையில் என்ற அடிப்படையில் நீடிக்கப்பட்டது.
கட்சி தலைமை பதவி
இந்தநிலையில் மைத்ரிபால சிறிசேன, கட்சி தலைமை பதவியை துறந்து அதற்கு பதிலாக விஜயதாச ராஜபக்ச கட்சியின் தலைவராக நியமிக்க ஏற்பாடுகளை செய்தார்.
இதற்கிடையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை, சந்திரிகா தரப்பினர் தெரிவு செய்தனர்.
தற்போதைய நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி விஜயதாச தரப்பு மற்றும் நிமால் சிறிபால டி சில்வா தரப்பு என்ற வகையில் இரண்டாவது செயற்பட்டு வருகிறது. இதேவேளை விஜயதாச ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |