தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் அறிவித்த 6 அதிரடித் தீர்மானங்கள்
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் விஜய் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நேற்று (21) நடைபெற்றது.
மாநாட்டு மேடைக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
சுமார் 35 நிமிடங்கள் நீடித்த அவரது பேச்சில் அரசியல் மற்றும் தேர்தல் குறித்த அதிரடியான கருத்துக்கள் இடம்பெற்றன.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களும் பின்வருமாறு:-
தீர்மானம் 1: பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளில் வெற்று விளம்பர மாதிரியை தி.மு.க. அரசு இறங்கியுள்ளது .
இதில் பெரும்பான்மையான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமானவை. முப்போகமும் விளையக்கூடியவை. தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதை தடுக்க, வருடக்கணக்கில் போராடி வரும் எளிய மக்களின் போராட்டத்தை நசுக்கவும், பலவந்தமாய் அவர்களின் நிலங்களைப் பறிக்கவும் பலவழிகளிலும் தொடர்ந்து தி.மு.க. அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பரந்தூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும்.
இதற்குப் பதிலாக, விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை விமான நிலையத்திற்காகத் தேர்வு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் தவறும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும்.
தீர்மானம் 2: சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள் என எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.
இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் சிறப்புத் தீவிர திருத்தத்தை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேற்கொள்ளக் கூடாது என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3: தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள், கடற்றொழிலாளர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் எப்போதும் அரசியல் ஆதாயமாக மட்டுமே பார்க்கின்றன.
நம் நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததால் கடலில் தத்தளிக்கும் படகு போலவே தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
இலங்கை அரசு தமிழக கடற்றொழிலாளர்களைக் கைது செய்வதைத் தடுக்க, அவர்களின் படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதை நிறுத்த, கடற்றொழிலையும் தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே கூறியது போல கச்சதீவை மீட்க வேண்டும் அல்லது 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4: ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.
ஆணவக் கொலைகளைத் தனிச் சட்டமியற்றித் தடுக்கத் தவறிய வெற்று விளம்பர மாதிரிகளை தி.மு.க. அரசு. எப்படிச் சமூக நீதி அரசாகும்? ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும்போது, அதை இந்தத் தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.
அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணம் முதல் காவலர் படுகொலைகள் வரை பல்வேறு காரணங்களுக்காக, சர்வ சாதாரணமாகக் கொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இளைய சமுதாயம் பாதுகாப்பற்ற சூழலைச் சந்தித்து வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வரும் வெற்று தி.மு.க. அரசுக்கு இம்மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 6: மூன்றாம் தரப்பு நிறுவனத்திடம் ஒப்பந்தம் மூலம் வெற்றுப்பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட பரீட்சைகள் வாயிலாக நேர்மையான முறையில் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசுப் பணியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பின்றிப் பரிதவித்து வரும் சூழல், தமிழ்நாட்டில் நிலவுகிறது.
போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் இளைஞர்கள், மாணவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான நேரடிப் பணியிடங்கள் பெருமளவு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
எனவே, இந்த முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், TNPSC உள்ளிட்ட முறைமைகள் வாயிலாகத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நேர்மையான முறையில்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
