விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார் - பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவிப்பு
நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.
உடுவில் பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் இனத்தின் ஒரு அடையாளம்
நீதியரசர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் இந்த நிகழ்வுக்கு வந்ததை நாம் பெருமையாக கருதுகின்றோம். வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதி என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் இனத்தின் ஒரு அடையாளமாக பார்க்கிறார்கள்.
நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் எமது உடுவில் பிரதேசத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது .
மல்லாக நீதிமன்றத்தில் நீதிபதியாக கடமையாற்றியதாக அறிந்ததோடு அண்மையில் இணுவில் கந்தசாமி ஆலயத்தின் நிர்வாக சபையினரை சந்தித்தபோது விக்னேஸ்வரன் காலத்தில் தமது ஆலயத்தின் நிர்வாகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு புதிய யாப்பு உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.
யாழ். தேர்தல் மாவட்டம் 19 பிரதேச செயலகங்களை கொண்டதாகக் காணப்படும் நிலையில்
அவரது நிதி ஒதுக்கீட்டில் பல வேலைத் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றமையால் எமது பிரதேச செயலகத்திலும் இரு கட்டட வேலை திட்டங்கள் இடம் பெற்று வருகிறது.
ஆகவே விக்னேஸ்வரன் எதிர்காலத்திலும் நமது பிரதேசத்திற்கு தன்னாலான அபிவிருத்தி
திட்டங்களை மேற்கொள்வதோடு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக தொடர்ந்து இருக்க
வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.