கௌரவமான உரிமை கோரி பொலிகண்டியில் கவனயீர்ப்பு போராட்டம் (Video)
திருகோணமலை - மூதூர் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ நாராயணபுரம் கிராமத்தில் வடக்கு கிழக்கு மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
100 நாட்கள் செயல்முனைவின் 83 ம் நாள் போராட்டம் இன்று (22.10.2022) முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பெண்கள், ஆண்கள், விவசாயிகள், சிறுகுழுக்களின் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பதுர்தீன் சியானா
முதலாம் இணைப்பு
வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி பகுதியில் உள்ள பாலாவி முகாம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவுத் திட்டத்தின் 82ஆம் நாள் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (21.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போராட்டத்தின் போது தமது சொந்த நிலங்களை விட்டு பல வருடங்களாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள தம்மை தமது சொந்த நிலங்களில் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்“, “நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை“ ,“இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்“, “வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்“ என பல கோசங்களை எழுப்பியிருந்தனர்.
13வது திருத்தச் சட்டம்
13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.
“பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே“ என பல கோரிக்கைகளையும் இதன்போது முன்வைத்துள்ளனர்.
இந்த போரட்டத்தில் முழங்காவில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





