வியட்நாம் ஜனாதிபதி டோ இலங்கை விஜயம்
இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நாளை மறுதினம் இரண்டு நாள் அரசமுறைப் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வியட்நாமுக்கு விஜயம் செய்திருந்தார்.
அப்போது அவர் விடுத்த அழைப்பினை ஏற்று இந்த விஜயம் அமைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது, வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இதில் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த பல்வேறு துறைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது. ஜனாதிபதி டோ லாம் தனது பயணத்தின் போது பின்வரும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'இலங்கை - வியட்நாம் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா மன்றத்தின்' (Sri Lanka – Vietnam Trade, Investment and Tourism Forum) ஆரம்ப விழாவில் வியட்நாம் ஜனாதிபதி பங்கேற்ற உள்ளார்.
இருநாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள பல உயர்மட்ட நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
இந்த விஜயமானது இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.