இந்த மௌனம் ஏன்! எம்.பி ஜெகதீஸ்வரனிடம் மூத்த ஊடகவியலாளர் சு.வித்தியாதரன் கேள்வி
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது, இந்நிலையில் ராஜபக்ச குடும்பம் என்ன செய்வது என்று பீதியடைந்த நிலையில் தடுமாறுகின்றது எனத் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சியினரும் அவர்களுக்கு உடந்தையாக மௌனிகளாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோசமான தாக்குதல்
இது குறித்து மூத்த ஊடகவியலாளர் சு.வித்தியாதன் இணைய பத்திரிகையில் தனது ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனின் ஆளும் கட்சி மிகக் காத்திரமான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவே இருக்கட்டும்.

ராஜபக்சக்கள் அதனால் பீதியடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டு இருக்கின்றமையும் உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் ராஜபக்சக்களுக்கு உடந்தையாக எதிர்க்கட்சியினர் மௌனிகளாக இருக்கின்றனர் என்று அவர் விமர்சிக்கின்றமை தான் எங்கோ இடிக்கின்றது.
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் சுமார் 250 பேர் உயிரிழந்தார்கள். சுமார் 500 பேர் வரை படுகாயம் அடைந்தார்கள். அது மோசமான தாக்குதல் தான். கொடூரமான நடவடிக்கை தான். எல்லோரும் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டிய பயங்கரவாதம் தான். அதில் கருத்து வேறுபாடில்லை.
பௌத்த - சிங்கள அரசுகள்
ஆனால், அதைப் போல பல மடங்கு பேரழிவுகளையும், துன்ப துயரங்களையும், கொடூரங்களையும் ஜெகதீஸ்வரனையும் உள்ளடக்கிய தமிழ் இனத்துக்கு இழைத்தது 2009 ஆம் ஆண்டில் முடிவுற்ற கொடூர இனயுத்தம்.
அதன்போது அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் மோசமாக இழைக்கப்பட்டன என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலே தீர்மானங்கள் மேல் தீர்மானங்கள் போட்டு வெளிப்படுத்தி, அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த விடயத்தில் தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டும் விதத்திலும், பொறுப்பு கூறலை நடைமுறைப்படுத்தும் வகையிலும், சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்ட விசாரணைகளை நடத்துவதற்கு ஜெகதீஸ்வரனையும் உள்ளடக்கிய தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு உட்பட தெற்கில் தொடர்ந்து அதிகாரத்துக்கு வரும் பௌத்த - சிங்கள அரசுகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்
அந்தப் பேரழிவுகள் தொடர்பாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட தமது தமிழ் இனத்துக்கு நீதி, நியாயம் செய்ய மறுக்கும் தமது பேரினவாத அரசு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனும் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் விசாரணை தொடர்பில் அவரது அரசு அசகாய சாதனைகளை நிலைநாட்டியிருப்பதாக குறிப்பிட்டு, அது தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனமாக இருக்கின்றமையை கிண்டலடிக்கும் ஜெககதீஸ்வரன் எம்.பி., தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனக்கொடூரங்கள் குறித்து நியாயம் செய்ய மறுக்கும் தம்முடைய அரசு குறித்துத் தாம் மௌனம் சாதித்து வருகின்றமையை மறந்து விட்டமை ஏனோ...?

இது விடயத்தில் பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு இருப்பது போன்று ஒரு பக்க விடயங்கள் மாத்திரமே தம் கண்களுக்குத் தெரியும் பிணி அவரையும் பிணித்திருக்கின்றது என்பதை மறந்து விடாமல் அவர் விமர்சனங்களை முன்வைப்பது நல்லது. தமது இனத்துக்கு இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு நீதி செய்யவே மறுக்கும் ஒரு தரப்புடன் தோளில் கைபோட்டுக் கொண்டு தான் தாம் அரசியல் செய்கின்றார் என்பதையும் அவர் மறக்காமல் இருப்பதும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.