மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதியான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தீயுடன் சங்கமமானது...
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவுமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் என அழைக்கப்படும் மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தனது 69வது வயதில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு அவரது இல்லத்தில் காலமானார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் மூத்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி
இறுதி கிரியைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வல்வெட்டித்துறை சந்தியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது பலநூற்றுக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதில் குறிப்பாக இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன், பழ.நெடுமாறனின் செயலாளர், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் , சிவஞானம் சிறிதரன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசியல் தலைவர்களான வீ. ஆனந்தசங்கரி , சிறிதுங்க ஜெயசூரிய ,வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து அவரது புகழுடல் தகனக்கிரியைக்கு ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
அதேவேளை சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வல்வெட்டித்துறை நகர் பகுதி வர்த்தகர்கள் தமது வியாபார நிலையங்களை மூடி கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு இருந்தனர்.
அத்துடன் நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, நூறுக்கணக்கான அஞ்சலி பதாகைகளும் கட்டப்பட்டு இருந்தன. அதேவேளை வல்வெட்டித்துறை நகர சபையில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்ததுடன் , நகர சபை கொடியும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தன.
பெரும் சோகம்
சிவாஜிலிங்கம் சிலவருடங்களாக சிறுநீரக செயலிழப்பு நோய் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.
அந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கடுமையான உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் பருத்தித்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் காலமானார்.
வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் போராளியாக இருந்து, தனது நீண்ட அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து வந்த கால பகுதியில் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவாகவும் பொறுப்பேற்று, சேவையாற்றி வந்தார்.
தமிழ் தேசிய அரசியல் களத்தில் சமரசமற்ற நிலைப்பாடுகளுக்காகவும், உரிமைப்
போராட்ட குரல்களுக்காகவும் பரவலாக அறியப்பட்டவர்.
அவரது மறைவு தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்த ஊரான
வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல்- ராகேஸ்










