வெசாக் வாரத்தையொட்டி அரசாங்கத்திடம் ஞானசார தேரர் முன்வைத்துள்ள கோரிக்கை
வெசாக் வார காலப்பகுதிக்குள் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் (ஹஜ்) நிகழ்வுகள் அமைவதால், மாடுகள் அல்லது ஏனைய விலங்குகளைப் பலியிடுவது தொடர்பில் அரசு இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இம்முறை இஸ்லாமிய நாட்காட்டியின் படி மே மாதம் 30 ஆம் திகதி ஹஜ் பெருநாள் அமையக்கூடும் எனக் கருதப்படுகின்றது.
அதேவேளை, பௌத்தர்களின் வெசாக் வாரம் மே மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதனால் வெசாக் வாரத்துக்குள்ளேயே இஸ்லாமியர்களின் குர்பான் கொடுக்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இது குறித்து ஞானசார தேரர் மேலும் கூறுகையில், "அனைத்து உயிர்களும் மரணத்துக்கு அஞ்சுகின்றன. எனவே, தன்னையே உதாரணமாகக் கொண்டு பிற உயிர்களைக் கொல்லவோ, அதற்குத் தூண்டவோ கூடாது என்பதே பௌத்த தர்மத்தின் போதனையாகும்.
சமூகப் பதற்றங்கள்
விலங்குப் பலியிடல் மற்றும் பசு வதை போன்ற செயல்களால் கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைதியற்ற சூழல்கள் உருவானதை நாம் அறிவோம். வெசாக் வாரத்தில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவது தேவையற்ற சமூகப் பதற்றங்களுக்கு வழிவகுக்கும்.

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், மத ரீதியான கருத்துக்கள் இணையத்தளங்கள் வாயிலாக ஆவேசமாகப் பரிமாறப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், உள்நாட்டில் இத்தகைய செயற்பாடுகள் பாரிய மோதல்களுக்கு வித்திடக்கூடும். மதச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்ற போதிலும், நாட்டின் அமைதியைப் பேணுவது அதைவிட முக்கியமானது.
எனவே, வக்பு சபை மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் இணைந்து அரசு இது குறித்து உரிய ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும்.
வெசாக் வாரத்தில் விலங்குப் பலியிடுவதைத் தவிர்ப்பது அல்லது அதனை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்." என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri