கிளிநொச்சியில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோரக்கன் கட்டு பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 16 வயதிற்கும் குறைந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 12 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கானது நேற்று (19.03.2024) மதியம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.எம் சகாப்தீனின் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு
இதன்போது குறித்த சந்தேக நபருக்கு 12 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பதினையாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 24 மாத கால சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தவறும் சந்தர்ப்பத்தில் 24 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்பளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடியிருப்பு கோரக்கன் கட்டு பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியமை சிறுமியின் வாக்கு மூலத்தின் மூலமும் சாட்சியங்கள் மூலமும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றை அடிப்படையாக கொண்டு சிறுமி சார்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கில் சந்தேக நபரை குற்றவாளியாக அடையாளம் கண்டு மேற்படி தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |