கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ள வெனிசுலா - அமெரிக்கா நிபுணர்கள்
வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள பகுதி அளவிலான கடல்சார் முற்றுகை ஒரு சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பு என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் நால்வர் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கரீபியன் கடற்பரப்பில் பாரிய இராணுவப் படைகளைக் குவித்து, வெனிசுலாவின் எண்ணெய் தாங்கி கப்பல்களை அமெரிக்கா மறித்து வருவது ஐநா சாசனத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒரு செயலாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தன்னிச்சையான பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்துவதற்காக இத்தகைய இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும், இது 1974ஆம் ஆண்டின் சர்வதேச ஆக்கிரமிப்பு வரையறையின்படி சட்டவிரோதமானது என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மனித உரிமை மீறல்கள்
மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்க காங்கிரஸ் உடனடியாகத் தலையிட்டு, மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான இந்த முற்றுகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கூறி கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இது வாழ்வுரிமையை அப்பட்டமாக மீறும் செயல் என ஐநா நிபுணர்கள் சாடியுள்ளனர்.
வெனிசுலா தனது எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டும் அதேவேளை, உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள தமது நாட்டின் வளங்களைக் கைப்பற்றவே அமெரிக்கா இத்தகைய சதித்திட்டங்களை முன்னெடுப்பதாக வெனிசுலா அரசு கூறுகிறது.
முறையான ஆதாரங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா நிபுணர்கள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam