வெனிசுலாவில் மீண்டும் முக்கிய அரசியல் தலைவர் கைது
வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான 61 வயதுடைய யுவான் பாப்லோ குவானிபா (Juan Pablo Guanipa), சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோவின் நெருங்கிய நண்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கைது
அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்தைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 8 முதல் வெனிசுலா அரசு மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகள் விடுவிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், விடுதலை செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குவானிபா, தற்போதைய நிர்வாகம் சட்டவிரோதமானது என்று விமர்சித்ததோடு, மற்ற அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் விடுதலையின் போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியதாகக் கூறி, அரசு வழக்கறிஞர் அலுவலகம் நேற்று(09) அவரை மீண்டும் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது.
குவானிபாவின் மகன் ரமோன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவி மச்சாடோ ஆகியோர் இதனை ஒரு திட்டமிட்ட "கடத்தல்" நடவடிக்கை என குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றம்
இதற்கிடையில், காரகாஸின் லாஸ் சோரோஸ் பகுதியில் ஆயுதம் ஏந்திய பத்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் குவானிபாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 3ஆம் திகதி, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு நியூயார்க்கிற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, அந்நாட்டின் அரசியல் சூழல் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

தற்போது இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதோடு, நாட்டின் எண்ணெய் வளங்களைச் சர்வதேச நிறுவனங்களுக்குத் திறந்து விட்டுள்ளார்.
இத்தகைய சூழலில், குவானிபா மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது வெனிசுலாவின் ஜனநாயக மீட்சி குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.