வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
மூன்று கட்டங்களின் கீழ் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதால் அது எமது டொலர் கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
டொலர் கையிருப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியில் தற்போது 6.5 பில்லியன் டொலர் கையிருப்பு காணப்படுகின்றது. நாணய நிதியத்தின் இலக்கு 5.6 பில்லியனாகும். நாம் அதனை தாண்டிவிட்டோம்.

விரைவில் சில கொடுப்பனவுகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. அவ்வாறான கொடுப்பனவுகளைச் செய்த பின்னரும்கூட எமக்கு 5.5 பில்லியன் கையிருப்பு இருக்கும்.
இந்த நிலையில் வாகன இறக்குமதி தொடர்பில் பேசப்படுகின்றது. வாகன இறக்குமதியினால் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்புக்கு தாக்கம் ஏற்படாது. சந்தைத் தொகுதியில் உள்ள டொலர்கள் ஊடாகவே அது நடக்கும்.
அரசாங்கத்தின் தீர்மானம்
ஆனால், வாகன இற்குமதியினால் எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்பது தொடர்பில் நாங்கள் பகுப்பாய்வுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருக்கின்றோம். அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும்.

வாகன இறக்குமதி முக்கியமாகும். தற்போது நாட்டில் பழைய வாகனங்களே காணப்படுகின்றன. பழைய வாகனங்களை பராமரிப்பதை விட புதிய வாகனங்களை இறக்குமதி செய்வது இலாபகரமானது.
அதுமட்டுமன்றி, வாகன சந்தை என்பது ஒரு முக்கிய துறை. அதிலும் பல பொருளாதார விடயங்கள் காணப்படுகின்றன.
வாகனங்கள் படிப்படியாக இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். பொதுப் போக்குவரத்து, வர்த்தக தேவைகள் மற்றும் தனியார் துறை என மூன்று கட்டங்களில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே அது மிகப் பெரிய தாக்கத்தை எமது டொலர் கையிருப்பில் ஏற்படுத்தாது. அவ்வாறு சிக்கல் நிலை தோன்றினால் நாம் அரசுக்கு அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri