வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து வெளியாகும் தகவல்கள்
வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மைக்காலமாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) மறுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதியமைச்சர் பெர்னாண்டோ, இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும், கூறுகையில்,
"அனுமதிப்பத்திரங்கள் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்வது இரத்துச் செய்யப்படவில்லை, ஆனால் இந்த வருடத்திற்கு வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாகன அனுமதிச் சலுகையை இரத்துச் செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை.
அந்நியச் செலாவணி
வாகன அனுமதிகள் தொடர்பாக நிரந்தர முடிவு எதுவும் இல்லை, அதே நேரத்தில் அதிகாரிகள் அல்லது தேவையான தகுதிகள் உள்ளவர்கள் சலுகைகளை இழக்கக்கூடாது.
வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில், கணிசமான எண்ணிக்கையில், சுமார் 15,000 முதல் 20,000 அனுமதிப்பத்திரங்கள் இன்னும் இருக்கின்றன.
அந்நியச் செலாவணி கையிருப்பைக் கருத்தில் கொண்டு அனுமதிகளைத் திறந்தால், இந்த ஆண்டு நாம் நிர்ணயித்த பொருளாதார இலக்குகளை எங்களால் அடைய முடியாது. பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியாது.
எனவே, இது ஒரு கொள்கைப் பிரச்சினை அல்ல, ஆனால் முன்னுரிமை பிரச்சினை, அதை இரத்துச் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை”என்று விளக்கியுள்ளார்.
அதேவேளை, அண்மையில், தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இவ்வருடம் அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |