வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
இந்த ஆண்டு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாகன இறக்குமதி
வாகன இறக்குமதி தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது. ஆனால் இந்த ஆண்டு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
ஏனென்றால் அதற்காக பல பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது. 5%-10% தேவையை பூர்த்தி செய்ய சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இருப்பினும், சுற்றுலாத் துறையில் தேவை இருந்தால் அதை கருத்திற்கொண்டு செயற்படுவது தவறில்லை.
தற்போது வயிற்றைப் பற்றி நினைக்காமல் நாட்டைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து கடைசியில் வயிறு, நாடு இரண்டையும் இழந்தபோது, சவாலை ஏற்க யாரும் முன்வரவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவாலை ஏற்றுக்கொண்டார்.
பொருளாதார நெருக்கடி
இப்போது நாடு நிதி ஒழுக்கத்துடன் சரியான பாதையில் செல்கின்றது. மக்களுக்கு சிரமங்கள் உள்ளன. இல்லை என்று அர்த்தம் இல்லை. ஆனால் பற்றாக்குறை நீக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியை ஒரேயடியாக தீர்க்க முடியாது. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
“அண்ணே, கடனை அடைக்க எனக்கு வழியில்லை. பிற்காலத்தில் தருகின்றேன் என்று சொல்லி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
எமது காலத்தில் 20 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவை வருமானத்தை அதிகரிக்கும் முறையுடன் செய்யப்பட்டுள்ளன.
எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்கு கட்சியின் அமைப்பாளர்கள் அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாகவும், வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வெற்றியை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதாகவும் எனவே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிச்சயம் கிடைக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |