வட பகுதியில் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி
கிளிநொச்சியில் மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வியாபாரிகள் 60 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையிலான விலைக்கே மரக்கறிகளை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மரக்கறி விலை வீழ்ச்சி குறித்து மேலும் தெரியவருகையில்,
தோட்ட செய்கையில் பெரும் நஷ்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாய் வரையிலும், பயிற்றங்காய் 100 ரூபாய் வரையிலும், பூசணி 100 ரூபாய் வரையிலும், ஏனைய மரக்கறி வகைகள் 150 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தோட்ட செய்கையாளர்களிடமிருந்து வியாபாரிகள், 60 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையிலான விலைக்கே மரக்கறிகளை கொள்வனவு செய்வதன் காரணமாக தோட்ட செய்கையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் கிருமி நாசினிகள், நாளாந்த கூலி, பசளை உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, விவசாய பொருட்களின் விலை, வறட்சி உள்ளிட்ட சவால்களிற்கு முகம் கொடுத்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் எமக்கு, செய்கைக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.