சர்ச்சையை ஏற்படுத்திய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய உறுதிமொழி
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடுகள் மற்றும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம், பொலிஸார் ஊடாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் உரியவர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (10.04. 2023) நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
சந்திப்பின் போது, குருந்தூர் மலையில் சைவ சமய வழிபாடுகள் நீக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் விகாரை நிறுவப்பட்ட விடயம் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் இந்திய துணைத் தூதருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.
அத்துடன், எல்லையோரக் கிராமங்களில் இடம்பெறும் பௌத்தமயாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்களின் விஸ்தரிப்பு தொடர்பிலும் சுட்டிக் காட்டியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடுகள் மற்றும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம், பொலிஸார் ஊடாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இவை தொடர்பில் கவனம் கெசலுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இவை தொடர்பில் உரியவர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடனான சந்திப்பு
அதனைகத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர், பௌத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவினை சந்தித்தித்து வெடுக்குறாறி மலை ஆலய விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, நீதிமன்ற வழக்கு முடியும் வரை இவ் விடயத்தில் தலையிட முடியாது என அமைச்சர் தெரிவித்தாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சந்திப்பில் இந்து மாமன்றத்தின் தலைவர், இந்து மாமன்றத்தின் பொருளாளர், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் மற்றும் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் உட்பட 8 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி : திலீபன்
முதலாம் இணைப்பு
வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்திக்கவுள்ளார்.
வெடுக்குநாறி ஆலய நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையின் பெயரில் இன்று (10.04.2023) இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் அவை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்படும் என அமைச்சர்களான டக்ளஸ் தேவானாந்தாவும் ஜீவன் தொண்டமானும் வாக்குறுதி அளித்தனர்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் விவகாரம்
அதனை நிறைவேற்றாது ஏமாற்றியதன் விளைவாக ஆலய நிர்வாகம் இதனை இந்திய தூதரகம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஊடாக பாரதப் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் ஆலய வரலாறு, தற்போதைய வழக்கு நிலவரங்கள், இடையூறுகள் தொடர்பாக கேட்டறியும் நோக்கில் இன்று மாலை இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை
இவ்வாறு இந்திய அரசாங்கம் குறித்த விடயத்தை கையில் எடுப்பதனால் இலங்கை அரசாங்கம் ஆட்டம் காணுமா அல்லது சட்டத்தின் பெயரால் தொடர்ந்தும் அழுத்தம் வழங்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் ஏற்கனவே இந்தியா கடும் அதிருப்தி கொண்டு அதனை இலங்கை அரசிற்கு தெரிவித்துள்ள அதேநேரம் வெடுக்குநாறியும் இந்தியாவின் கையில் சென்றிருப்பது தமிழர்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
