வெடுக்குநாறி ஆதிசிவன் கோவில் மீண்டும் நிறுவப்படும் யாருடைய அனுமதியும் தேவையில்லை- டக்ளஸ் (Video)
‘‘வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சினையில் நடந்திருப்பது தவறு எனினும் கோவில் மீண்டும் நிறுவப்படும்‘‘ என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தன் தலைமையில் நேற்று (09.04.2023) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்
‘‘இன்றைய நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளை தனிப்பட்ட முறையில் அழைத்த போது ஒரு கட்சியை தவிர ஏனைய எதிர்கட்சிகள் தேர்தல் வேண்டாம் என முன்வைத்துள்ளனர்.
தேர்தலுக்கு எதிராக யாரும் செயற்படமாட்டர்கள். 1990 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விடுதலைப்புலிகள் எதிர்த்தனர். ஆனால் நாங்கள் இதன் ஊடாக பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்தோம்.
நானும் 30 வருடமாக நாடாளுமன்றத்தில் இருந்துவருவதால் எனக்கும் அங்கிருக்க கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளும் புறமும் தெரியும் எனவே உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.
அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டம் உலகத்திலே எல்லா நாடுகளும் தங்களுடைய நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் இருக்கின்றது ஆனால் பெயர்கள் வித்தியாசப்படலாம்.
பயங்கரவாத தடைசட்டத்தின் யதார்த்தம்
இலங்கையில் தமிழ் பேசும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே இது புதிதானதல்ல ஆளும் கட்சிகள் எதாவது ஒன்றை செய்யும் போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதுதான் இங்குள்ள யதார்த்தம்.
அந்தவகையில் எதிர்கட்சிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனரே தவிர இந்த சட்டத்தில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை.
ஆனால் இந்த பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் தொடர்பாக நாங்கள் கட்சி என்ற வகையில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் நாடாளுமன்றம் வரும்போது எங்கள் கருத்துக்களை தெரிவிப்போம். அதேவேளை நீண்டகாலமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தச்சட்டமூலமான மாகாணசபை முறைமை ஊடாகத்தான் பிரச்சினைகளுக்ககு தீர்வு காணலாம் என நீண்டகாலமாக நான் சொல்லி வருகின்றேன்.
அப்போது தமிழ்கட்சிகள் இயக்கங்கள் அதனை எதிர்த்தது. ஆனால் இன்று அவர்களும் அதற்கு ஆதரவாக இருக்கின்றனர். அந்தவகையில் ஜனாதிபதி ஏற்கனவே அதனை விளங்கியிருப்பதால் அதனை முன்வைத்துள்ளார் அது வரவேற்க கூடியது.
சட்டத்தை மீறினால் உரிய நடவடிக்கை
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய கடற்தொழிலாளர்கள் றோலர் படகுகளில் அத்துமீறி புகுந்து கடற்தொழில் செய்ய அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்கு புறம்பாக செயற்படாது என தெரிவித்துள்ளார்.
சட்டவிரேத கடற்தொழிலை கட்டுப்படுத்தவில்லை என கேட்டால் களவு எடுத்தால் பிழை என சட்டம் இருக்கின்றது கொலைகள் செய்யக் கூடாது என சட்டம் இருக்கின்றது.
ஆனால் அவைகள் நடந்து கொண்டுதானே இருக்கின்றது வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கை பூராகவும் சட்டவிரோதமாக கடற்தொழில் செய்கின்றனர். எனவே சட்டத்தை மீறி செயற்படுவது தெரியவரும் போது நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்.
அதேவேளை மட்டக்களப்பு வாவியில் சுற்றுலாதுறையை ஊக்கிவிப்பது மற்றும் கல்லடி
பழைய பாலத்தை எவ்வாறு மக்களின் நலனுக்கு உபயோகிக்க முடியும் என நேரில் சென்று
ஆராயவுள்ளேன்‘‘ என்றார்.