வவுனியா சித்திரை கலை விழாவில் இருந்து நீக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர்
வவுனியா (Vavuniya) மாவட்ட சித்திரைக் கலை விழாவில் இருந்து வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார பேரவை இணைந்து நகரசபை மைதானத்தில் நேற்றும் (04) இன்றும் (05) சித்திரைக் கலை விழா நிகழ்வை நடத்தியுள்ளன.
உயர் மட்ட அழுத்தம்
இதன்போது, நேற்று (04) காலை அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த காட்சிக் கூடம் ஒன்றில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் வைக்கப்பட்டு அதன் பெயர் பொறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் புதூர் நாக தம்பிரான் மற்றும் புத்தர் சிலை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சித்திரை கலை விழாவில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் என ஊடகங்களில் செய்தியும் வெளியாகி இருந்தன. இருப்பினும் மாலை குறித்த ஆதி லிங்கேஸ்வரரை பார்வையிட சென்ற பலரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
வர்ணப் பூச்சு மூலம் ஆதி லிங்கேஸ்வரரின் பெயர் அழிக்கப்பட்டு வெறும் லிங்கம் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர் மட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அங்கு கடமையில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |