வெடுக்குநாறி விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் முடிவு
வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று (16.3.2024) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில், கடந்த சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட்ட எண்மர் நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் கைது
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்கு சி.வி.விக்னேஷ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
கலந்துரையாடலானது இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, எதிர்வரும் திங்கட்கிழமை அன்று ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி கைதானவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஷ்வரன், புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |