வெடுக்குநாறிமலை விவகாரம்: அநீதிக்கு எதிராக அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு
வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் நடத்திய வன்முறைகள் மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த அநீதிக்கு எதிராக இன்று சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொலிஸார் நடத்திய வன்முறை
கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாகிகள் மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரியும் ஒன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்கள், சமயம் சார்ந்த அமைப்புக்கள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள், சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், என அனைவரையும், கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள்
மேலும், வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு வவுனியாவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரை பொலிஸார் அராஜகமாகக் கைது செய்து, பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியதையடுத்து அவர்கள் விளக்கமறியலில் உள்ளனர்.
அவர்களில் 5 பேர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனக் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
செய்தி - ராகேஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |