இரு வெவ்வேறு விபத்துக்களில் இருவர் பலி
நாடாளாவிய ரீதியில் நாளுக்கு நாள் விபத்துக்கள் ஏற்படுவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றன.
அதற்கமைய, யாழ்ப்பாணம் - வடமராட்சி முள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் வாகனத்தில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று(20) நடைபெற்றுள்ளது.
விபத்தில் போது ஜெ.ஜெயந்தன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றிக்கொண்டு, கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மிக வேகமாக பயணித்த கப் ரக வாகனம் முள்ளி சந்தி பகுதியில் திருப்ப முற்பட்ட வேளை, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்போது வாகனத்தின் பின்னால், மணலில் இருந்து பயணித்த குறித்த இளைஞன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அதனையடுத்து அவரை அங்கிருந்து மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது சம்பவம் தொடர்பில் மேலதிக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: தீபன்
வவுனியா
வவுனியா ஏ9 வீதியில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (21) அதிகாலையளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார (வயது 22) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தையடுத்து பாரவூர்தி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் கொண்டு செல்லப்பட்ட 97 ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணையின் பின் சாரதியையும், ஆடுகளையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









