வவுனியா பல்கலைக்கழகத்தின் ஏ.ரி.எம். இயந்திரம் பழுது: மாணவர்கள் அவதி (Photos)
வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரம் பழுதடைந்து காணப்படுகின்றமையால் மாணவர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் தமது பணத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவதியுறுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழகமாக அண்மையில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு தங்கியிருந்து கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் மாணவர்கள் அனைவரும் வசதியற்ற தூர இடங்களிலிருந்து வந்து கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் தமது அத்தியாவசியமான உணவு உட்பட அவசியத் தேவைகளுக்குப் பெற்றோர்களினால் அனுப்பி வைக்கப்படும் சிறிய பணத்தை நாளாந்தம் பெற்று தமது அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இவ்வாறு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட பணம் பெற்றுக்கொள்ளும் ஏ.ரி.எம். இயந்திரம் கடந்த சில தினங்களாகப் பழுதடைந்துள்ளதால் பூவரசன்குளத்தில் அமைந்துள்ள பணம் பெற்றுக்கொள்ளும் ஏ.ரி.எம் நிலையத்திற்குச் சென்று பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தூர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை உடனடியாக
திருத்தி அமைத்துத்தருமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





