வவுனியாவில் கோவிட்டால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கூறியுள்ள விடயம்
வவுனியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக பெறாதவர்களே இதுவரை உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற கோவிட் நிலைமை தொடர்பான அவசர கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கடந்த புதன்கிழமை வரை கோவிட் காரணமாக 49 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.
இவ்வாறு மரணமடைந்த 49 பேரில் 37 பேர் எந்தவிதமான தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஆவர். 12 பேர் சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் மட்டும் பெற்றுக் கொண்டவர்களாவர்.
தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட எவரும் இதுவரை வவுனியாவில் மரணமாகவில்லை. தடுப்பூசிகளை முழுமையாகப் பெறுவதன் மூலம் மட்டுமே இறப்புக்களைக் கட்டுப்படுத்த முடியும்.
இதனால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அனைவரும் தாமாக முன் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.



