வவுனியாவில் காணியை கையகப்படுத்த வந்தவர்களை திருப்பி அனுப்பிய மக்கள்
வவுனியாவில் (Vavuniya) மக்களின் காணியை கையகப்படுத்த வந்த வனவள திணைக்களத்தினரை அப்பகுதி பொதுமக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (11.06.2024) இடம்பெற்றுள்ளது.
1997ஆம் ஆண்டு கதிர்வேலர் பூவரசங்குளத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் 2011ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறியிருந்தனர்.
அவர்கள் வசித்த பிரதேசம் அனைத்தும் பற்றைக் காடுகள் நிறைந்ததாக காணப்பட்ட நிலையில், அவர்கள் இப்பகுதியை சுத்தம் செய்து விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் முரண்பாடு
இந்நிலையில், அங்கு வன வளத் திணைக்களத்திற்குரிய காணிகள் இருப்பதாக தெரிவித்து அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள அந்த கிராமத்துக்கு அவர்கள் வருகை தந்திருந்தனர்.
இதன்போது, வயல் நிலங்கள் மற்றும் தோட்டம் செய்கின்ற பகுதிகளையும் வனவளத்திற்கு உரியதாக அடையாளப்படுத்தி இருந்தமையினால் அவர்களை இந்தப் பகுதியில் அளவீடு செய்ய விடாது பொதுமக்கள் அவர்களோடு முரண்பட்டுக் கொண்டனர்.
தமது கிராமத்துக்குரிய கிராம சேவையாளரை அழைத்து வருமாறும் அதன் பின்னரே அளவீட்டுப் பணியை மேற்கொள்ள அனுமதிப்போம் என்றும் தாம் விவசாயம் செய்யும் பகுதியை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
கிராம மக்களின் கேள்வி
இந்நிலையில், அங்கு வருகை தந்திருந்த வன வளத் திணைக்களத்தினர் தாம் செய்மதி ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை சரி பார்ப்பதற்கு வந்திருப்பதாகவும் தமது பணியை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கூறினர்.
எனினும், 1985ஆம் ஆண்டுக்கு பின்னர் வனமாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை ஜனாதிபதி விடுவிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அவரின் கருத்து பொய்யா என்பதை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கேட்டுள்ளனர்.
அதற்கிணங்க, வனவள திணைக்களத்தினர் அப்பகுதியில் இருந்து சென்றதோடு கிராம சேவையாளரையும் அழைத்து வருவதாக தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, அங்கு குழுமிய பொதுமக்களும் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |