சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வவுனியா மக்கள்
வவுனியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளத்தினால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
வவுனியா செட்டிகுளத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளத்தின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் மழை காரணமாக வெள்ள நீர் கிராமத்திற்குள் புகுந்தமையால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. செட்டிகுளத்தின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள இலுப்பைக்குளம் வான் பாய்வதன் காரணமாக அக் கிராமத்தில் வெள்ள நீர் காரணமாக போக்குவரத்து பாதைகள் நீரில் மூடப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.
இதேவேளை, வெள்ளம் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளில் அப் பகுதி கிராம அலுவலர், செட்டிகுளம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மக்களை பாதுக்காப்பாக இருப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், வெள்ள பாதிப்புக்கள் குறித்தும் மதிப்பீடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் தாழ்நில பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நெடுங்கேணி ஒலுமடு கூழாங்குள வீதி அணை மூடி மழைவெள்ளம் ஓடிவருவதால் இந்த வீதியுடான போக்குவரத்து செய்வதில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
நெடுங்கேணி கமநல திணைக்களம், விவசாய திணைக்களம், பொலிஸ் நிலையம், பொது வைத்தியசாலை ஆகிய இடங்களில் மழைவெள்ளம் நிரம்பியதுடன் கமநல திணைக்களத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட உர களஞ்சியத்திற்கும் மழைவெள்ளம் புகுந்துகொண்டுள்ளதால் உர வகைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) தொடக்கம் இன்று மாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது இதனால் வவுனியாவில் தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அரச சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் மேலும் பாதிப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என அனர்த்த
முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |








