வவுனியா மாநகரசபை மேயர் விவகாரம் : உறுப்பினர் ஒருவர் பரபரப்பு தகவல்
வவுனியா மாநகர முதல்வர் 8 குற்றங்களை செய்துள்ளார். இது இரண்டு விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வவுனியா மாநகர சபையின் சுயேட்சை உறுப்பினர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று(28.06.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கையின் படி
மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் பேசுபொருளாகவுள்ள வவுனியா முதல்வர் பணி நீக்கம் மற்றும அவருடைய உறுப்புரிமை நீக்கம் தொடர்பாக தாங்கள் செய்த ஊழலை மறைப்பதற்காக ஜனநாயக படுகொலை என்னும் பெயரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்ய முயல்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மக்களை திசை திருப்ப முறைகேடான முறையில் மக்களை பலிக்கடாவாக்க முயல்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்து விட்டு இன்று அதே மக்களையே வீதியில் இறங்கி போராட வைக்கிறார்கள்.
மாகாண ஆளுநரால் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையின் படி முதல்வர் 8 குற்றங்களை செய்துள்ளதாக சட்டத்தின் பிரகாரம் விசாரணை குழுவின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை முதலாம் மாதமே மக்களுக்கு வர்த்தமானி மூலம் வெளிப்படுத்தப்பட்டது. அதற்கான அனுமதி பெறப்பட்டு தான் அவரது பதவி நீக்கம் ஆளுநரால் செய்யப்பட்டது.
நன்கு தெளிவாக விசாரணைகள் இடம்பெற்று தான் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த பழிவாங்கல்களும் இல்லை. பதவி ஆசைகளோ அல்லது கட்சி மோதல்களோ இல்லை. எம்மால் மேயருக்கு பல தடவை சுட்டி காட்டியும் அதனை அசண்டையீனமாக செயற்பட்டு, தான் செய்வேன் எனக் கூறி பழி வாங்கும் எண்ணத்துடன் செயற்பட்டதன் விளைவே இந்த பதவி நீக்கத்திற்கு காரணம்.
நீதிமன்ற வழக்கில் இருக்கும் போது
திருநாவற்குளம் வாய்க்கால் அகழ்வுக்கு 1.3 மில்லியன் ரூபாய் நிதி மோசடி நடந்துள்ளது. அங்காடி கடை வழங்கலில் பல செல்வந்தர்தர்களுக்கு கடை வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளின் கடைகள் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

50இற்கு மேற்பட்ட கடைகள் முறையற்ற வித்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களுக்குகாகவே முதல்வர் பதவி நீக்கம் செயயப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு எதிர்வரும் 2ஆம் திகதி வருகிறது. அது பிரதி முதல்வருக்கு எதிராக போடப்பட்ட வழக்கு.
அவர் மாநகர சபை எல்லைக்குள் வசிக்கவில்லை என்பது தான் அவர் பிரதி முதல்வராக இருக்க தகுதியற்றவர் என போடப்பட்ட வழக்கு. மற்றது முதல்வருக்கு எதிரான வழக்கு. ஆகவே இரண்டையும் ஒன்றாக்கி நீதிமன்ற வழக்கில் இருக்கும் போது எப்படி ஆளுநர் நீக்கலாம் எனக் கூறி மக்களை குழப்புகிறார்கள்.
மக்களோ, வர்த்தகர்களோ இதில் கவனமாக இருங்கள். பல முறை அழைத்தும் பகிரங்க விவாதத்திற்கு வருகிறார்கள் இல்லை. முதல்வரே அல்லது அவரது கட்சியினரோ அல்லது கட்சி தலைவர்களோ வாருங்கள் நாம் ஆதாரங்களை காட்டுகின்றோம். எனவே மக்களுக்கான ஆட்சி அமைய வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.